அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Wednesday, December 23, 2015

விதியுடன் மறைவான காரணிகள்

தக்தீர் வெளியாவதற்கான இன்னொரு வழிமுறை என்னவென்றால், அதற்காக (விதி வெளிப்படுவதற்காக) காரணிகள் தோற்றுவிக்கப்படுகின்றன என்றாலும் அவை மறைவானவையாக இருக்கின்றன. இறைவன் கூறாதவரை அல்லது மிக நுட்பமாக கவனிக்காதவரை அவை புலனாவதில்லை. எனவேதான், அவை காரணிகளின்றியே வெளிப்பட்டன என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை காரணப்பொருள்களின் துணை கொண்டே வெளியாகின்றன.

உதாரணமாக, ஒருவர் தமது விரோதிக்கு எல்லாவிதமான தொல்லைகளும் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். தான் விரும்பினால் கொலை

செய்துவிடும் அளவுக்கு ஒரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருந்தும், அவருக்கு நீண்டகால ஆசை இருந்தும் அவ்விரோதியைக் கொல்லாமல் விட்டுவிடுகிறார். இப்போது வெளிப்படையாகப் பார்க்கும்போது அவர் செய்த அந்த செயலுக்கு எவ்வித காரணமும் இல்லை எனத் தெரிகிறது. ஆனால் காரணம் இருக்கவும் செய்யலாம். உதாரணமாக என்னை யாரும் பார்க்கிறார்களோ என்னவோ என்ற பயம் தோன்றியிருக்கலாம். அல்லது அவருடைய உறவினர்களுக்குத் தெரிந்துவிட்டால் என்னைப் பழிவாங்கிவிடுவார்கள் என்று அஞ்சியிருக்கலாம். அல்லது இதுபோன்ற வேறு ஏதாவது காரணத்தை இறைவனை குறிப்பாக ஏற்படுத்தியிருக்கக் கூடும். இவ்வாறான சம்பவம் குறித்து திருக்குர்ஆனிலும் ஓரிடத்தில் வருகிறது. ஹஸ்ரத் ஷுஅய்ப் நபி அவர்களை நோக்கி அவருடைய எதிரிகள் இவ்வாறு கூறுகிறார்கள்

“நிச்சயமாக நாங்கள் உம்மை எங்களிடையே பலவீனமான ஒருவராகவே காண்கின்றோம். உம்முடைய கூட்டத்தினர் இல்லாதிருப்பின் நாங்கள் உம்மைக் கல்லெறிந்தே கொன்றிருப்போம்.” (11:92)

அவர்கள் ஹஸ்ரத் ஷுஅய்ப் நபி அவர்களைக் கொல்ல விரும்பிய போதிலும் அவரைக் கொல்ல முடியவில்லை. ஏனெனில், அவருடைய உறவினர்கள் கோபமடைந்து பழிவாங்குவார்கள் என அவர்கள் பயந்தார்கள். ஆயினும் அவர்கள் இந்த ஆசையை வெளிப்படுத்தாதவரை, இவர்கள் ஆவேசம் அடைந்து ஏன் கொல்லாமல் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்திருக்கும். கொலை செய்ய விரும்பியதை அவர்கள் வெளிப்படுத்தியதிலிருந்தே, இந்த தக்தீரும் (விதியும்) ஒரு குறிப்பிட்ட காரணத்தின் மூலம் வெளியாகக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது.

இது எவ்வாறு சிறப்பு விதியாகும் என்று இங்கு நாம் சந்தேகப்படக் கூடாது. எவருக்கு அதிகமான உறவினர்கள் உள்ளார்களோ மக்கள் அவருக்குப் பயப்படவே செய்கிறார்கள். எனவே இது சாதாரண இயற்கை விதியின் கீழ் நடைபெறவில்லை: மாறாக, சிறப்பு விதியின் கீழ் நடைபெற்றுள்ளது. ஏனெனில் ஹஸ்ரத் ஷுஅய்ப் (அலை) தம்மை நபியாக வாதித்ததுடன் தாம் வெற்றி பெறுவதாகவும் விரோதிகள் தம்மை வெற்றிக் கொள்ள முடியாது என்றும் பகிரங்கமாக அறிவித்தார்கள். ஆகவே அவருடைய விரோதிகள் அவரை வெற்றி கொள்ள முடியாமல்போனது, சாதாரண இயற்கைச் சட்டத்தின் விளைவு என்று கூறிவிட முடிதாது. மாறாக, இது சிறப்பு விதியாகும். மேலும் அல்லாஹ்வின் கை எதிரிகளின் கைகளை தடுத்துக் கொண்டிருந்தது. அதுவும் குறிப்பாக, ஹஸ்ரத் ஷுஅய்ப் நபி அவர்களின் உறவினர்களும் எதிரிகளின் கூட்டத்திலேயே இருந்தார்கள். ஷுஅய்ப் நபியின் கூட்டத்தில் இருக்கவில்லை என்பதை நாம் பார்க்கிறோம். மாபெரும் மன்னர்களைக் கூட மக்கள் சிலநேரத்தில் பயப்படாமல் கொன்றுவிடுவதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இது இறைவனின் சிறப்புவிதிதான் என்பது மேலும் தெளிவாகிறது.

இவ்வகையான (சிறப்பு) விதிக்கான உதாரணத்தை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் அஹ்ஸாப் போரில் வெளியானதைக் காணலாம். அஹ்ஸாப் போரில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் தாக்குவதற்கென பலமான ஆயத்தங்களை செய்திருந்தார்கள். எவ்வளவு முயற்சித்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் அச்சமயம் 10,000 படைவீரர்களை அழைத்து வந்திருந்தனர். முஸ்லிம்கள் வெளியே சென்று மலம் கழிக்கக் கூட இடமில்லாத அளவுக்கு அபாயகரமான சூழ்நிலை உருவாகியிருந்தது. திருக்குர்ஆன் இந்த நிலையை பின்வருமாறு கூறுகிறது:

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை எதிர்த்துப் படைகள் வந்தபோது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை நினைத்துப் பாருங்கள், அப்போது நாம் அவர்களுக்கு எதிராக காற்றையும், நீங்கள் காணாத படைகளையும் அனுப்பினோம். மேலும் அல்லாஹ் உங்கள் செயல்களை நன்கு பார்க்கிறான். அவர்கள் உங்களிடம் உங்களுக்கு மேலிருந்து (அதாவது மலை வழியாகவும்) உங்களுக்கு கீழேயிருந்தும் (தரை வழியாகவும்) வந்த நேரத்தையும் (உங்கள்) இதயங்கள் உங்கள் தொண்டைகளை அடைத்த நேரத்தையும் நீங்கள் அல்லாஹ்வை குறித்து சந்தேகமான எண்ணங்களைக் கொண்ட நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்) அந்நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பெரும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு, கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கப் பட்டனர். மேலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏமாற்றத்தைத் தவிர வேறெதையும் எங்களிடம் வாக்குறுதியளிக்கவில்லை என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோயுடையோரும் கூறிய நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்)”. (திருக்குர்ஆன் 33:10-13)

அஹ்ஸாப் போரில் இறைவன் முஸ்லிம்களுக்கு அவர்கள் காணாதவற்றின் மூலம் உதவி புரிந்திருக்கிறான் என்பது இந்த வசனத்திலிருந்து நிரூபணமாகிறது. அதுவும் இயல்பாகவே பயப்படுபவர்களாக இருக்கும் நயவஞ்சகர்கள், முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டதைப் பார்த்து தைரியமடைந்து, முஸ்லிம்களின் இறைவனும், அவர்களுடைய தூதரும் நம்மிடம் ஏமாற்றத்தையும் பொய்யையுமே வாக்குறுதியளித்தார்கள் என்று கூறத் தொடங்கி விட்டபோது இறைவன் முஸ்லிம்களுக்கு உதவி புரிந்தான்.

அஹ்ஸாப் போரில் இறைவன் மறைவான காரணிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்கு உதவி புரிந்திருக்கிறான். இதனைக் கண்ட முஸ்லிம்களே ஆச்சரியமடைந்தார்கள். எதிரிகள் மேலோங்கியிருந்த – முஸ்லிம்களைச் சுற்றி வளைத்துக் கொண்ட நாட்களில் ஒருநாள் இரவு வேளையில், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ‘யாராவது இறக்கிறார்களா?’ என வினவினார்கள், நான் இருக்கிறேன் என ஒரு நபித்தோழர் பதில் கூறினார். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீர் அல்ல; பின்னர் சற்று நேரத்திற்குப் பிறகு கூப்பிட்டார்கள். நான் இருக்கிறேன் ஹுஸூர் என அந்த சஹாபி பதில் கூற, நீர் அல்ல; வேறு யாராவது இருக்கிறாரா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்து பின்னர் யாராவது இருக்கிறாரா? எனக் கேட்டார்கள். அப்போதும் அதே நபித் தோழர் பதில் கூறினார். அப்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், எதிரிகள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என இறைவன் எனக்கு அறிவித்துள்ளான். அவர்களின் நிலைமை என்ன என்று நீங்கள் சென்று பாருங்கள் எனக் கூறினார்கள். அந்த நபித்தோழர் சென்று பார்த்த போது போர்க்களம் வெற்றிடமாகக் கிடந்ததையும், பகைவர்கள் வெருண்டோடி விட்டதையும் கண்டார்கள். சில நபித் தோழர்கள் நாங்கள் அந்த நேரத்தில் விழித்துக் கொண்டுதானிருந்தோம்; எனினும் கடும் குளிர் காரணமாக பேச முடியாமல் இருந்தோம் என்று கூறுகிறார்கள்.

இப்போது வெளிப்படையாகப் பார்க்கும்போது எதிரிகள் வெருண்டோடுவதற்கான எந்தக் காரணமும் தென்படவில்லை. அப்போது நபித் தோழர்களும் ஆச்சர்யமடைந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சில மக்களிடமிருந்து தெரிவதைப் போன்று, அதற்கும் காரணங்கள் இருந்தன. அவை மறைவானவையாக இருந்தன. அது என்னவென்றால் பகைவர்கள் இரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். இதற்குள் ஒரு கூட்டத்தினரின் தலைவருடைய விளக்கு அணைந்துவிட்டது. எவருடைய விளக்கு அணைந்துவிட்டதோ அவருக்கு துன்பமும் கஷ்டங்களும் வரும் என்று அரபு நாட்டில் நம்பப்பட்டு வந்தது. இப்போது என்ன செய்வது? என்று அந்த கூட்டத்தினரின் தலைவர் ஆலோசனைக் கேட்டார். கடைசியில், நாம் நமது கூடாரத்தை எடுத்து கொஞ்ச தூரம் சென்று கூடாரமடிப்போம். நாளை படைகளுடன் வந்து சேர்ந்து கொள்வோம் என முடிவாயிற்று. இவ்வாறு, ஒரு பரிகாரத்தைத் தேடியவர்களாய் அவர்கள் பின்னால் செல்லும் போது அதனைப் பார்த்துவிட்ட இரண்டாவது கூட்டத்தினரும் அதனைப் பார்த்து மூன்றாவது கூட்டத்தினரும் இடத்தைக் காலி செய்து இறுதியில் எல்லோருமே திரும்பிச் செல்லத் துவங்கி விட்டனர். எதுவரைஎன்றால் படைக்கு தலைவராயிருந்த அபூ சுஃப்யான் நிலை தடுமாறியவாறு கட்டப்பட்டிருந்த ஒட்டகத்தின் மீது ஏறி அதனை ஓட்டுவதற்காக அடிக்க ஆரம்பித்தார். எல்லோரும் வெருண்டோடிய பின் ஒருவர் மற்றவரைக் காரணம் கேட்டபோதுதான் எந்த காரணமுமின்றி வீணாக ஓடிவந்திருப்பது தெரியவந்தது.

சுருக்கமாக, படைகள் ஓடி வந்ததற்குக் காரணம் இருந்தபோதிலும் அவை தென்பட வில்லை; மறைவானதாக இருந்தது. (ஜூனூதன் ய் லம்தரவ்ஹா)

அப்போது நாம் அவர்களுக்கெதிராக படைகளை அனுப்பினோம்; அப்படைகளை நீங்கள் பார்க்கவில்லை; ஏனெனில் அவை மறைவானதாயிருந்தன என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 3:10)

அங்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் இல்லை, வேறு யாராவது இருக்கிறார்களா? என மீண்டும் மீண்டும் ஏன் கேட்டார்கள்? அதற்க்குக் காரணம், உங்களுக்கு வெற்றியைத் தருவது இறைவனே ஆவான். இல்லையெனில் உங்களுடைய நிலைமையோ ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உங்களை அழைத்தும் நீங்கள் அவருடைய குரலுக்கு பதிலளிக்க முடியாத அளவுக்கு உங்கள் நாவுகள் வரண்டு விட்டன. அதே சமயத்தில் இங்கு இறைவனின் வல்லமையைப் பாருங்கள்! அவன் உங்களுக்கு எதிரான பெரும் கூட்டத்தைக் கொண்ட எதிரிகளை விரட்டியடித்துவிட்டான் என்பதை முஸ்லிம்களுக்கு எடுத்துக் கூறுவதற்காகத்தான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு பலமுறை கேள்வி கட்டார்கள்.