அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Wednesday, December 16, 2015

சூபிகளின் (இறைஞானிகளின்) கூற்று

இல்ம் (இறையறிவு) மற்றும் கத்ர் (இறை வல்லமை) இவ்விரண்டையும் புரிந்து கொள்ளாத காரணத்தால் இன்றைய சூபிகளிடம் பல வினோதமான எண்ணங்கள் பரவியுள்ளன. சில குறிப்பிட்ட வாக்கியங்களே இன்றைய சூபிகளின் வாயிலிருந்து வெளியாகின்றன. அவை இறை வணக்கத்தின் குறிப்பிட்ட அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றின் மூலமாக அறிவற்றவர்களை அவர்கள் பயமுறுத்துகின்றனர். அறிவுள்ள மனிதர் அவர்களின் பிடியில் சிக்கமாட்டார். இதுபற்றி நான் எனது சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன். இது ஒரு நகைச்சுவையை விட குறைந்ததல்ல.

நான் ஒருமுறை லாஹூரிலிருந்து வந்து கொண்டிருந்தேன். இரண்டு மூன்று பேர் என்னை வழியனுப்ப இரயில் நிலையத்திற்கு வந்தார்கள். இது 1910 இல் நடந்த சம்பவமாகும். தொடர் வண்டியில் நாங்கள் நுழைந்தபோது அங்கே சிலர் நின்று கொண்டிருந்தனர். இன்று (1910) அமிர்தசரசில் ஐ.ஏ.சி ஆக இருக்கும் மியான் முஹம்மது ஷரீப் சாஹிப் என்னிடம், நீங்கள் அங்கு உட்காராதீர்கள். அங்கு பீர் சாஹிபும், அவருடைய முரீதுகளும் உள்ளனர். (இந்த பீர் சாஹிப் பஞ்சாபிலுள்ள பிரசித்திபெற்ற பீர் சாஹிப் ஆவார். இந்த காலத்தில் நமது மாநிலத்தில் உள்ள பீர்மார்களில் இவர்தான் பெரியவர்) அவர்கள் உங்களுக்கு நஷ்டமிழைக்கக் கூடும் எனக் கூறினார். இதனால் வேறொரு அறை தேடப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இரண்டாம் வகுப்புப் பெட்டியில் இடம் கிடைக்கவில்லையாயின் இன்டரிலேயே உட்காருங்கள் என்று மியான் சாஹிப் ஆலோசனை கூறினார். டாக்டர் ரஷீதுத்தீன் சாஹிபும் கூட இருந்தார். அவர் இல்லை, இதே பெட்டியில்தான் உட்காரவேண்டும். அவர்களுக்காக ஏன் பயப்பட வேண்டும்? என்று கூறினார்.

நான் ஆரம்பத்திலேயே மனத்தால் இதைத்தான் விரும்பியிருந்தேன். எனவே அந்த அறையிலேயே போய் உட்கார்ந்து கொண்டேன். சில நேரத்திற்குப் பிறகு தொடர்வண்டி புறப்பட்டுவிட்டது. எல்லோரும் சென்றுவிட்டனர். பீர் சாஹிப் மட்டுமே என்னுடன் பயணமாவது தெரிய வந்தது. இரயில் நிலையத்தில் இருக்கும்போதே பீர் சாஹிபிடம் நீங்கள் ஏதாவது சாப்பிடுகிறீர்களா? என்று மக்கள் கேட்டனர். எனக்கு இப்போது பசியில்லை. நான் அமிர்தசரஸ் சென்றுதான் சாப்பிடுவேன் என்று கூறி, பீர் சாஹிப் மறுத்து விட்டார். ஆனால் தொடர்வண்டி சென்றதும் தலைப்பாகையின் மீது சுற்றியிருந்த ஒரு பச்சைத் துணியை கழற்றினார். ஜன்னலுக்கு வெளியே முகத்தை நீட்டி வேலையாட்களின் அறையிலிருந்து தனது சேவகரைக் கூப்பிட்டு சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார். சாப்பிடுவதற்கு எதுவுமில்லையே என்று சேவகர் பதில் கூறினார். எனக்கு ரொம்ப பசிக்கிறது என்று பீர் சாஹிப் கூறினார். இதனை கேட்ட சேவர்கள் நல்லது பீர்! நான் தேநீருக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். உன்னிடமிருந்த அந்த உலர்ந்த பழத்தையாவது கொடு என்று பீர் சாஹிப் கூறினார். அவன் அந்தப் பழத்தைப் பீர் சாஹிபிடம் கொடுக்க அதனை அவர் வாங்கிக் கொண்டார்.

இதன் பிறகு அவர் என்னை நோக்கி, நீங்கள் யார்? என்று கேட்டார். என்னுடைய பெயர் மஹ்மூது அஹ்மது என்று நான் கூறினேன். பின்னர் அவர், நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று வினவ, நான் காதியான் போகிறேன் என்று பதில் கூறினேன். இதனை கேட்ட அவர் நீங்கள் காதியானைச் சார்ந்தவரா? அல்லது ஏதாவது வேலைக்காக காதியான் போகிறீர்களா? எனக் கேட்டார். நான் காதியானைச் சார்ந்தவன் என்று பதில் கூறினேன். இதனைக் கேட்ட அவர் கொஞ்சம் உஷாரானார். உங்களுக்கு மிர்ஸா சாஹிபோடு ஏதேனும் தொடர்பு உண்டா? என்று வினவினார். ஆம்! எனக்கு அவரோடு தொடர்பு உண்டு? என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர் என்ன தொடர்பு? என்று கேட்டார். நான் அவருடைய மகன் என்று கூறினேன். அப்படியா? எனக்கு உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் எனக்கு நீண்ட காலமாக உங்களை சந்திக்கவேண்டும் என்று ஆசை இருந்தது எனக் கூறினார். அவருடைய இந்த பேச்சைக் கேட்டு எனக்கு மிகவும் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஏனென்றல், அந்த பீர் சாஹிபுக்கும் நம் ஜமாத்தோடு கடுமையான பகைமை இருந்தது. ஒருவர் அஹ்மதியுடன் பேசினால் அவருடைய மனைவிக்கு தலாக் ஆகிவிடுகிறது என்பது பீர் சாஹிபின் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) ஆகும். இருந்தாலும் நான் மவுனமாக இருந்தேன். அடுத்து அவர் பேச்சு எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை எதிர்பார்த்திருந்தேன்.

இதற்குப் பிறகு அவர் ஒரு கைக்குட்டையைத் திறந்தார். அதில் பழங்கள் இருந்தன. தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து எனக்கும் அவருக்குமிடையே இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தார். நீங்களும் சாப்பிடுங்கள் என்று கூறி அந்தக் கைக்குட்டையை எனக்கு முன்னால் விரித்தார். எனக்கு இருமலும், ஜலதோஷமும் இருந்ததால் நான் தின்பதற்கு மறுத்துவிட்டேன். எனக்கு தொண்டையில் வலியிருக்கிறது என்றேன். இல்லை ஒன்றும் ஆகாது. நீங்கள் சாப்பிடுங்களேன் என்று கூறினார் பீர் சாஹிப். இந்த நிலைமையில் நான் சாப்பிட்டால் அதிகம் கஷ்டம் ஏற்பட்டு விடும் என்றேன். இதனைக் கேட்ட பீர் சாஹிப், அல்லாஹ் செய்வதுதான் நடக்கப்போகிறது: இதெல்லாம் வீண் பேச்சுக்கள்தான் என்றால். பீர் சாஹிப் தனது சிறப்பான ஞானத்தை(?) வெளிப்படுத்தட்டும். அவர்களின் நிலையை நாம் தெரிந்து கொள்ளலாம் என்ற இந்த சந்தர்ப்பத்திற்காகவே நான் காத்திருந்தேன்.

நான் அவருக்கு பதில் கூறினேன். பீர் சாஹிப்! நீங்கள் இந்த விஷயத்தை தாமதமாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் ( அல்லாஹ் செய்வதுதான் நடக்கப் போகிறது என்ற) இந்த விஷயத்தை லாஹூரில் வைத்தே கூறியிருந்தால் நாம் இருவரும் நஷ்டத்திலிருந்து தப்பித்திருப்போம். நானும், நீங்களும் பயணச் சீட்டு எடுப்பதில் பணத்தை வீணாக்கியிருக்கின்றோம். நீங்கள் அமிர்தசரஸ் செல்ல வேண்டும் என்றும், நான் காதியான் செல்ல வேண்டும் என்றும் விதியில் எழுதப்பட்டிருந்தால் நம்மை அல்லாஹ், தானே கொண்டு சேர்த்திருப்பான். பயணச் சீட்டிற்காக பணத்தை செலவிட என்ன தேவை வந்துவிட்டது? என்றேன். இதனைக் கேட்ட பீர் சாஹிப், இல்லை; காரணிகளை கையாளவும் வேண்டுமல்லவா? என்றார், இதே காரணியை கவனத்திற்கொண்டுதான் நானும் பழம் சாப்பிட மறுத்தேன் என நான் கூறினேன். நான் சொன்னதன் நோக்கமும் இதுதான் என பீர் சாஹிப் கூறினார். ஆனால் அவருடைய பொருளும் என்னுடைய பொருளும் எவ்வாறு ஒன்றாக இருக்கமுடியும் என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

இதைத் தவிர இன்னும் பல விஷயங்கள் பற்றி பீர் சாஹிபுடன் பேசினேன். ஆனால் ‘விதி’யைப் பற்றி இந்த அளவுக்கே பீர் சாஹிபுடன் பேச்சு நடந்தது. இந்த காலத்து பீர்கள் இந்த விவகாரம் குறித்து எந்த அளவுக்கு தவறான எண்ணங்களில் மூழ்கியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் திருக்குர்ஆனின்படி இவர்களின் இந்த எண்ணங்கள் தவறானவையாகும்.

சிலருடைய கூற்றின் பொருள்

சிலருடைய கூற்று இவ்வாறும் இருக்கிறது. பயனற்ற முயற்சியில் உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்; எது கிடைக்க வேண்டுமோ, அது கிடைத்தே தீரும் என்கின்றனர்.

இந்த மாதிரியான கூற்றுகளிளிருந்து சிலர், எல்லா விஷயத்திலும் முயற்சி செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறார்கள். அவர்களின் கூற்றுக்கு இதுதான் பொருள் என்றால் நான் கேட்கிறேன்; அவர்கள் உண்பதற்காக உணவை எடுப்பதில்லையா? வாயில் போடுவதில்லையா? அதனை மென்று விழுங்குகின்றார்களா இல்லையா? பின்னர் உறங்குவதற்காக படுப்பதில்லையா? அல்லது இரவும் பகலும் ஒரு நிலைமையில் உட்கார்ந்திருக்கிறார்களா?

எல்லா வேலையும் இறைவனே செய்ய வைக்கிறான் என்றால், ‘முயற்சி செய்யாதீர்கள்’ என்ற அவர்களின் கூற்றுக்கு என்ன பொருள்? ஒருவர் முயற்சி செய்கிறார் என்றால் அந்த முயற்ச்சியையும் இறைவன்தானே அவர் மூலமாக செய்ய வைக்கிறான்(!)? பின்னர் ஏன் தடுக்கப்பட வேண்டும்?

சூபிகளின் கூற்றுக்கு சரியான பொருள்.

ஆனால் உண்மை என்னவென்றால், இப்படிப்பட்ட கூற்றுகளின் பொருளை மக்கள் புரியவில்லை. உண்மை என்னவென்றால் சிலர் உலக வேலைகளிலேயே மூழ்கியிருக்கின்றனர். எல்லா முயற்சிகளையும் அதற்காகவே செலவு செய்து செய்கின்றனர். உதாரணமாக 8, 9 மணி நேரம் கடையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால் வீட்டிற்கு வந்தால் அங்கும் கடையின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அல்லது ஒரு விவசாயி என்றால் அவர் எப்போதும், ‘இப்படி ஆகிவிட்டால் என்னவாகும்? அப்படி நடந்தால் என்னவாகும்? என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். சான்றோர்கள் இந்த விதமான சிந்தனைகளைச் தடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான பயனற்ற முயற்சிகளை தடை செய்துள்ளார்கள். ஆனால் உண்மையான முயற்சிகளை அவர்கள் தடுக்கவில்லை.  பயனற்ற முயற்சி என்றால், உதாரணமாக, குளிர் காலத்தில் மெத்தையை தன்னுடன் வைத்திருப்பது அவசியம். இப்போது ஒருவர் முப்பது கனமான மெத்தைகளையும், பத்து போர்வையையும் போர்த்திக் கொண்டால் அது வீணானவை; ஒரு போர்வை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று நாம் கூறுவோம். இது போன்றே அவர்களும் கூறுகின்றனர். மற்றபடி அவர்களும் உண்மையான முயற்சியை மேற்கொள்ளத்தான் செய்கின்றனர்.

இன்னொரு பிரிவினர்.

இப்போது நான் கூறிய இந்த இரு பிரிவினரைத் தவிர இன்னொரு மூன்றாவது பிரிவினரும் உள்ளனர். அவர்கள் இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழிமுறையைத் தாமாகக் கையாண்டுள்ளனர். ஆனால் அதுவும் இஸ்லாத்திற்கு மாற்றமானதே.

அவர்கள் கூறுவதாவது, ஒவ்வொரு செயலிலும் விதியும் செயல்படுகிறது; திட்டமும் செயல்படுகிறது. எல்லா பொருட்களிலும் இறைவன் ஆற்றலை வைத்துள்ளான். உதாரணமாக, நெருப்பில் எரியும் ஆற்றலையும், தண்ணீரில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றலையும் இறைவன் உருவாக்கி வைத்துள்ளான்; எந்தவொரு மனிதனும் உருவாக்கவில்லை. நெருப்பில் விறகு எரிய வேண்டும் என்றும், இரும்பு, பித்தளை, வெள்ளி, தங்கள் முதலியவை உருக வேண்டும் என்றும் இறைவன் விதித்துள்ளான். அடுத்து அதனை சீரமைத்தல் அவற்றை குறிப்பிட்ட உருவத்தில் அமைத்தல் கொல்லன் அல்லது பொற்கொல்லனின் வேலையாகும். இதுவே திட்டம் என்பது.

இந்த கூற்று சரியானதுதான். ஆனால் அவர்கள் இத்துடன் நின்று விடுகின்றனர். மேலும் இதன் மீதே தமது சிந்தனைகளின் அடிப்படையை வைக்கின்றனர். எனவே இந்த வழியும் சரியான வழியல்ல என்று நாம் கூறுகிறோம். உண்மையில் ஓர் அறிவியல் அறிஞர் கூறுவதையே இவர்களும் கூறுகிறார்கள். ஆயினும் ஓரளவு வித்தியாசம் உள்ளது. அறிவியல் அறிஞர் இந்த விஷயத்தை இன்னும் வெகுதூரத்திற்கு எடுத்துச் செல்கின்றார். உதாரணமாக, வெள்ளி உருகுவதற்கு என்ன காரணம்? அது எவ்வாறு உருகுகிறது? பின்னர் அதற்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியாது என்று அவரே கடைசியில் கூறிவிடுவார். எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள ஒரு மாறுதலடையாத சட்டத்தின் கீழ் இந்த எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன என்பது மட்டுமே எனக்குத் தெரியும் என்பார். ஆனால் இந்த பிரிவில் உள்ள மக்கள் முழு உலகத்தையும் ஒரு சட்டத்தின் கீழ் உள்ளதாகக் கருதுகின்றனர். அதனை இயற்கைச் சட்டம் என்கின்றனர். (தொடர்ச்சி)