அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Thursday, December 17, 2015

தவறான பெயரின் காரணமாக ஏமாற்றம்.

நான் ஆராய்ந்தவரை அவர்கள் இந்த விவகாரத்திற்கு தவறான பெயர் வைத்துள்ளனர். எனவே விதி பற்றிய விவகாரத்தில் சிக்கலும் குளறுபடியும் ஏற்பட்டு விட்டது. தவறான பெயர் வைப்பதனால் ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு பலமுறை நிகழ்ந்துள்ளது.

உதாரணமாக, ஒருவர் நல்லடியார் என்று பெயர்பெற்று, அந்த நல்லடியார் மிகவும் தீய வேலையைச் செய்தார் என்று கூறப்பட்டால், கேட்பவர் இவர் என்ன கூறுகிறார்? என்று ஆச்சர்யப்படுவார். ஒருபுறம் இவர் அவரை

நல்லடியார் என்று கூறுகிறார்; மறுபுறம் அவர் மீது குறை கூறுகிறார்.

ஆக ஒருவருடைய தவறான பெயர் அர்த்தத்துடன் இருக்குமாயின், அதனால் அதிக தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆயினும் அர்த்தமில்லா பெயராயிருந்தால் ஏமாற்றம் ஏற்படாது. உதாரணமாக ருல்தூ என்பவர் திருடினார்; அல்லது கொள்ளையடித்தார் என்று கூறினால் இந்த வாக்கியத்தைக் கேட்டு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. அவ்வாறே ருல்தூ என்பவர் இறைநேசமுடையவர், நல்லவர் என்று கூறினாலும் யாதொரு ஆச்சரியமும் ஏற்படாது. ஆனால், அந்த இறையடியார் (அதாவது அப்துல்லாஹ் என்பதன் பொருள்) ஷிர்க் செய்தார் என்று கூறப்பட்டால் மாபெரும் ஆச்சர்யம் ஏற்படும்.

விதி விவகாரத்தில் தவறான பெயர்

அர்த்தமுள்ள பெயர்கள் தவறாக வைக்கப்பட்டால் அவற்றால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அவ்வாறே இம்மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ‘தக்தீர்’ என்ற சொல் சரியானதுதான். ஆனால் அதற்கு எதிராக அவர்கள் வைக்கின்ற பெயர்களுக்குரிய பொருள்கள் முற்றிலும் நேர்மாறானதாகும். உதாரணமாக சிலர் ‘தக்தீர்’க்கு (இறை நியதிக்கு) நேர் எதிராக செய்யப்படும் மனித செயலுக்கு ‘தத்பீர்’ (திட்டம்) என்று பெயர் வைக்கிறார்கள். இன்னும் சிலரோ இவ்விரண்டிற்கும் ஜபர் (பலவந்தம்) என்றும் (உரிமை – சுதந்திரம்) என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் இவ்விரு பெயர்களும் தவறானவையாகும். இந்த சொற்களுக்குரிய பொருள் உண்மையான விவகாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாகவே இந்த பிரச்சனை தவறானதாக ஆகிவிட்டது.

பெயரைத் தவறாக வைத்தது அவர்கள் செய்த முதல் தவறாகும். இந்தப் பெயர்கள் மட்டுமல்ல, இவ்விரண்டிற்கும் எத்தனை பெயர்களை அவர்கள் வைத்துள்ளார்களோ அத்தனையும் தவறானவையாகும். உதாரணமாக, 1, தக்தீர் மற்றும் தத்பீர் 2, ஜபர் – இக்தியார், 3.குத்ரதே கதீமா – குத்ரதே ஹாதிஸா. ஆனால் இந்த பெயர்கள் முழுமையான முறையில் அதன் முழு பொருளையும் சூழ்ந்திருப்பதில்லை.

தக்தீருக்கு எதிராக திட்டமிடுவதை தத்பீர் எனக் குறிப்பிடுவது தவறு

தக்தீர் (இறை நியதி) என்பது சரியே. ஆனால் அதற்கு நேர் மாறாகச் செய்யும் மனித செய்யலை தத்பீர் (திட்டம்) என்று கூறுவது தவறாகும். ஏனெனில் இறைவனும் தத்பீர் செய்கிறான். அவன் கூறுவதாவது:

“அவன் விண்ணிலிருந்து பூமி வரையிலும் தன் கட்டளையைத் தன் திட்டத்திற்கேற்ப நிலைநாட்டுவான். பின்னர் (ஒரு சுற்றி முடித்த பின்னர்) அது ஒரு நாளில் அவனை நோக்கி மேலே செல்ல ஆரம்பித்து விடுகிறது. அந்த நாளின் அளவு, உங்கள் கணிப்பிற்கேற்ப ஓராயிரம் ஆண்டுகளாகும்.” (32:6)

இறைவன் ‘ஜப்பார்’ ஆக இருக்கிறான் என்று திருக்குர்ஆனிலிருந்து விளங்குகிறது (59:24) ஆனால் அதற்குப் பொருள் சீர்திருத்தம் செய்யக் கூடியவன் என்பதாகும். இவர்கள் கூறுவதோ ஜபர் என்பது வலுக்கட்டாயமாக வேலை செய்ய வைப்பதைக் குறிக்கும். (எனவே ஜப்பார் என்றால் மனிதனை பலவந்தமாக வேலை செய்ய வைப்பவன் என்று பொருள் கொடுக்கிறார்கள்.) ஆனால் உண்மையில் எவ்விதத்திலும் இது சரியாகாது. அரபி மொழியில் ‘ஜபர்’ என்பது உடைந்து போன எலும்பை சரி செய்வதற்குச் சொல்லப்படும். மேலும் இச்சொல் இறைவனுக்காக பயன்படுத்தப்படும் போது அதன் பொருள், அடியார்களின் மோசமான வேலைகளை சரி செய்பவன் என்பதாகும்.

இதன் மற்றொரு பொருளாவது, பிறருடைய உரிமையை பறித்து தன்னுடைய மதிப்பை நிலை நாட்டுபவன் என்பதாகும். ஆனால் இந்தச் சொல் அடியார்களை குறித்து பயன்படுத்தப்படும் போதுதான் இந்தப் பொருள் கொடுக்கப்படுமே தவிர இறைவனை குறித்து இந்த பொருளில் பயன்படுத்தப்படமாட்டாது; பயன்படுத்தப் பாடவும் முடியாது. ஏனெனில் எல்லாமே இறைவனுடையதுதான். எனவே அவர் பிறருடைய மதிப்படியும், மரியாததையும் நிலைநாட்டுகிறான் என்று கூறவே முடியாது.

அதுமட்டுமல்லாமல், தத்பீர் என்ற சொல், தான் வெளிப்படுத்த வேண்டிய அளவுக்கு தனது முழுமையான பொருளை வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் தத்பீர் என்பதன் பொருள் அரபி மொழியில், ஒரு பொருளை முன்னால், பின்னால் நகர்த்துதல் என்பதாகும். இதன் கருத்து ஏற்பாடு, அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஏற்பாடு, அமைப்பு என்ற சொல் இங்கு எழுந்த பிரச்னையை பற்றி ஒன்றும் விளக்கவில்லை.

இப்போது ‘இக்தியார்’ (அதிகாரம்) என்ற சொல் எஞ்சியுள்ளது. இந்த பொருள், பிடித்தமானதை எடுத்துக் கொள்ளுதல் என்பதாகும். இதன்படி அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம், அனுமதி கொடுத்துள்ளான் என்றால், எவருக்கு எது பிடித்ததோ அதனை அவர் எடுத்துக் கொள்வார். தனக்கு நல்லதாகப் பட்டதை செய்வார். அப்படியிருக்க அவர் செய்த ஏதாவதொரு செயலுக்காக தண்டனை ஏன் கொடுக்கவேண்டும்? எனவே ‘இக்தியார்’ (அதிகாரம்) என்ற இந்த சொல்லை பயன்படுத்துவது தவறாகும்.

சரியான பெயர்கள்

உண்மையில் திருக்குர்ஆனிலிருந்து நிரூபணமாகும் பெயர்களாவன:

1. கத்ர், 2. தக்தீர், 3. கஸா, 4. தத்பீரே இலாஹி

மேலும் இவற்றிற்கு நேர்மாறாக கஸப் (சம்பாதித்தல் மற்றும் இக்திஸாப் (கஷ்டப்பட்டு உழைத்தல்) என்ற சொற்களை இறைவன் வைத்துள்ளான். எனவே திருக்குர்ஆனின்படி இந்த விவகாரம் தக்தீரே இலாஹி என்றும், இக்திஸாப் அல்லது குத்ரத்தே இலாஹி என்றும், கஸப் அல்லது கழாயே இலாஹி என்றெல்லாம் பெயர் பெரும். இப்போது இந்த பெயர்களின் கீழ் இந்த விவகாரத்தை நான் விளக்கிக் கூறுகிறேன்.

திருக்குர்ஆன் தக்தீரே இலாஹிக்கு நேர்மாறாக கஸப் (உழைத்தல்) இக்திஸாப் (கடினமாக உழைத்தல்) ஆகிய சொற்களை அடியாருக்காக மட்டுமே உபயோகப்படுத்த முடியும் இறைவனுக்காக உபயோகப்படுத்த முடியாது. ஏனெனில் கஸப் என்பதற்கு ஒரு பொருளைத் தேடுதல் மற்றும் முயற்சித்து அதனை அடைதல் என்று பொருள். ஆனால் அல்லாஹ்வோ தேடுவதுமில்லை; ஒன்றை உழைத்து முயற்சித்து பெறுவதுமில்லை. எல்லா போருகளும் அவனது கட்டளையைப் பின்பற்றக் கூடியவையாகும். மேலும் அவை அவனுடைய அணுவளவு சைகையினால் அவனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தயாராக இருக்கின்றன. பின்னர் அவனோ துன்பத்தை விட்டும் தூய்மையானவன். இவ்வாறு ஆகுக என்று அவன் கூறியதும் அது அவ்வாறு ஆகிவிடுகிறது. எனவே அவனுக்காக கஸப் (உழைப்பு) என்ற சொல்லை உபயோகிக்க முடியாது. (தக்தீர் என்ற) இந்த சொல்லை கையாண்டதன் மூலம் ஏற்பட்ட தனிச்சிறப்பு வேறெந்த சொல்லின் மூலமும் ஏற்பட்டிருக்க முடியாது.

இச் சொற்களைப் பற்றி சுருக்கமாகக் கூறிய பின்னர். திருக்குரானின் மூலம் நிரூபணமாவது என்ன என்ற கேள்வியின் பக்கம் திரும்புகிறேன். இறைவன் அடியார்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறான். அவர்களுடைய ஒவ்வொரு செய்கையும் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப நடக்கின்றதா? அதாவது தானதர்மம் செய்தல், நல்லொழுக்கம், அநுதாபம் அல்லது திருட்டு, கொள்ளையடித்தல் இவையனைத்தையும் இறைவனே செய்ய வைக்கிறானா? அல்லது அடியார்கள் சம்பாதிக்கட்டும்; எவ்விதம் அவர்கள் சம்பாதிப்பார்களோ அவ்விதமே அவர்கள் பிரதிபலனைப் பெறுவார்கள் என்று அவன் விட்டு வைத்துள்ளானா? என்ற கேள்வியின் பக்கம் வருகிறேன். திருக்குர்ஆனிலிருந்து இரண்டு விஷயம் நிரூபணமாகின்றது.  (தொடர்ச்சி)