அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Friday, December 18, 2015

விதி விவகாரத்தின் மீது சொல்லளவில் நம்பிக்கை கொள்வது போதாது.

இது குறித்து நான் விளக்கப் போகுமுன் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியமென கருதுகிறேன். முஸ்லிம்கள் ‘விதி விவகாரத்தில்’ அதிகமாக ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். வெறும் விதியின் மீது நம்பிக்கை கொண்டால் மட்டும் போதும் என்று நினைத்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் அதனைப் புரிவதும், அறிவதும் மிக அவசியம். ஏனெனில் இறைவன் அதனை ஈமானின் ஒரு நிபந்தனையாகக் குறிப்பிடுள்ளான். நம்பிக்கை கொள்வதற்கு அது கட்டாய விதியாக இருப்பதால், அது நமக்கு பயனுள்ளது என்பதும் தெரிய வருகிறது. இல்லையாயின் அதன் மீது நம்பிக்கை கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்காது. 

உதாரணமாக, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டுமென்று கட்டளையுள்ளது. இதனால் ஏற்படும் பயனாவது, மனிதனுக்கு தனது அருளாளனைப் பற்றிய அறிவு கிடைக்கிறது. மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணமாகவும், அவனுடைய பிறப்பின் குறிக்கோளாகவும் விளங்குகின்ற இறைவனுடன் தொடர்பு கொள்ளுதல் என்பது அந்த நம்பிக்கையின் விளைவாகவே கிடைக்க முடியும். இன்னொரு பயனும் உள்ளது. அந்த அறிவு மற்றும் ஈமானின் மூலமாக, ஓர் இறைவன் இருக்கின்றான். அவனுக்கு முன்னால் நான் எனது செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது என்று மனிதன் கருதுகிறான்.

அவ்வாறே நபிமார்களின் மீது ஈமான் கொள்ள வேண்டும் என்ற கட்டளை உள்ளது. அதற்குரிய பயனாவது, அவர்களின் மூலமாக இறைவனை சென்றடையும் வழியை மனிதன் அறியமுடிகிறது. அவ்வாறே வானவர்களின் மீது ஈமான் கொள்ள வேண்டுமென்று கட்டளையுள்ளது. அதனால் ஏற்படும் பயன் என்னவெனில், அந்த வானவர்கள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறார்கள் என்று மனிதன் நம்புகின்றான். மேலும் அந்த நல்ல எண்ணங்களின்படி மனிதன் செயல்புரிய முயற்சி செய்கிறான். அந்த வானவர்களோடு அவன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, நேரான பாதையில் அடியெடுத்து வைப்பதற்காக அவர்களை உதவியாளர்களாகவும், நண்பர்களாகவும், மனிதன் ஆக்கிக் கொள்கிறான்.

இது போன்றே இறை வேதங்களின் மீது ஈமான் கொள்ள வேண்டும் என்று கட்டளையுள்ளது. அவற்றின் மூலமாக அல்லாஹ்வின் விருப்பத்தை மனிதனால் அறிய முடிகிறது. அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதைகளைக் கண்டு கொள்ளமுடிகிறது.

அவ்வாறே மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வின் மீது ஈமான் கொள்ள வேண்டும். இதன் பயன் என்னவென்றால், மனிதனுடைய வாழ்வும் வீணானதல்ல; மாறாக எப்போதும் நிலைத்து நிற்கக் கூடியது என்று மனிதன் உணர்ந்து கொள்கிறான். மேலும் அதற்காக முயற்சி செய்கிறான். இது போலவே ஈமான் கொள்ள வேண்டியது அவசியம் என கூறப்பட்டவை ஒவ்வொன்றிலும் ஏதாவதொரு பயன் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் தக்தீர் மீது ஈமான் கொள்வதால் என்ன பயன்? என்பது பற்றி முஸ்லிம்கள் சிந்திக்கவில்லை. விதியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கம்பை எடுத்துக் கொண்டு நிற்கிறார்கள். இதைக் கேட்டு, ‘அப்படியா!’ சரி ஏற்றுக் கொள்கிறோம், இதுவே எமது தலைவிதி’ என்று கூறுவதைத் தவிர அவர்கள் வேறு என்ன பதில் கூற முடியும்?

ஆக தக்தீரை நம்புவதால் ஏற்படும் பயன்களை சிந்திக்காமல், மூடத்தனமான கொள்கைகளின் பக்கம் முஸ்லிம்கள் சென்றுவிட்டனர். தக்தீரை நம்புவதால் என்ன நன்மை என்று அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்திருந்தால் விதிக்கு அவர்கள் கொடுத்த வரையறை தவறென தானாகவே நிரூபணமாகியிருக்கும். தாம் சொல்வதெல்லாம் வீணானவை என்பது அவர்களுக்கு தெளிவாகியிருக்கும். ஆனால் தக்தீரை நம்புவது வீணானதாக இருக்க முடியாது. ஆன்மீகத்துடன் அதற்கு மிகுந்த தொடர்புண்டு. அதனால் மனிதனுக்கு மாபெரும் நன்மை கிடைக்கிறது. ஏனெனில் மனிதனுடைய ஆன்மீகத்தோடு தொடர்புடையதும், அவனது ஆன்மீக வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதுமாகிய விஷயங்களின் மீதே ஈமான் கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

தக்தீரை நம்புவது கடமையாக்கப்பட்டதிலிருந்து அதற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்புண்டு என்றும், அதனால் ஆன்மாவுக்கு பயன் கிடைக்கிறது என்றும் தெரிந்து கொள்கிறோம். இது நிரூபணமாகிவிட்ட பிறகு அந்த பயன்கள் யாவை என்பதை அறிந்து கொள்வதன் பக்கமும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அதன் பயன்களை அறிந்து கொள்ளாதவரை அதிலிருந்து என்ன பயன்களைப் பெற முடியும்?

ஆனால் தத்துவ வாதிகள் (தத்துவ ஞானிகள் அல்ல) கத்ர் (விதி), ஜப்ர் (நிர்பந்தித்தல்) போன்ற வாதங்களில் நம் வாழ்நாளையே வீணாக்கி விட்டனர். ஒரு நிமிடம் கூட இது பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் தேவையில்லாமல் தலையைப் பிய்த்துக் கொள்வதற்கு இதுவே காரணம். இதன் மூலம் அவர்கள் எந்தவொரு பயனையும் பெறவில்லை. ஆனால் இந்த விவகாரம் குறித்து அவர்கள் சிந்தித்து செயல்பட்டிருந்தால் கண்டிப்பாக பயன் பெற்றிருப்பார்கள்.

இந்த தத்துவவாதிகள் ஒருபுறமிருக்க, தக்தீர் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு மிக அவசியமென்று நம்பிக்கை கொண்டவர்கள், அது குறித்து – அதனை நம்பாமலிருப்பதால் என்ன நஷ்டம்? நம்புவதால் என்ன லாபம் என்றெல்லாம் சிந்தித்துணர்ந்து அந்த அறிவின் மூலமாக பயனைப் பெற்றார்கள். அவர்கள் எதுவரை முன்னேற்றமடைந்தார்கள் என்றால், அந்த அறிவின் மூலம் அவர்கள் இறைவனை அடைந்தார்கள். ஆனால் இன்னொரு பிரிவினரோ என்ன செயல் வெளிப்படுகிறதோ அதை நாம் செய்கிறோமா? அல்லது இறைவன் செய்ய வைக்கிறானா? என்று வீண்வாதம் செய்தே நேரத்தை வீணடித்து விட்டார்கள்.

சுருக்கமாக, இந்த விவகாரம் குறித்து வீண்வாதம் செய்பவர்களிடம் பெரும் தவறு ஏற்பட்டுவிட்டது. எனது சமுதாயத்தில் சிலர் விதி விவகாரத்தின் மூலம் அழிந்து நாசமாவார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு அவர்கள் இலக்காகிவிட்டார்கள்.