அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Wednesday, December 9, 2015

தக்தீரின் முக்கியத்துவம்


அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு அவன் ஏதேனும் ஒரு வழியை ஏற்ப்படுத்துவான். அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவன் அவருக்கு உணவு அளிப்பான். அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவான். அல்லாஹ் ஒவ்வொன்றிருக்கும் ஓர் அளவை நியமித்துள்ளான். (திருக்குர்ஆன் 65:3,4)

“இணைவைப்பவர்கள் (இவ்வாறும்) கூறினார்கள்: அல்லாஹ் நாடியிருப்பின், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் அவனைத் தவிர வேறெதனையும்

வணங்கியிருக்கமாட்டோம். மேலும் நாங்கள் அவன் (கட்டளை) இன்றி எதனையும் விலக்கியிருக்க மாட்டோம். அவர்களுக்கு முன் (உண்மையின் பகைவர்களாக) இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். (இறைதூதை) மிகத் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர தூதர்களுக்கு வேறு என்ன பொறுப்புள்ளது?

நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். தீயவர்களை விட்டு விலகுங்கள் என்ற கட்டளையுடன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நிச்சயமாக ஒரு தூதரை அனுப்பினோம். அவர்களுக்கு சிலருக்கு அல்லாஹ் நேர்வழியை வழங்கினான். மற்றும் சிலருக்கு அழிவு உறுதியாகிவிட்டது. எனவே நீங்கள் பூமியில் பயணம் செய்து (நபிமார்களைப்) பொய்ப்படுத்தியவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்”. (திருக்குர்ஆன் 16:36-37)

தக்தீரின் முக்கியத்துவம்:

நான் ஒரு முக்கியமான விஷயம் பற்றி உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன் என்று நான் நேற்று கூறியிருந்தேன். அந்த விஷயம் ஈமானோடு தொடர்புடையது என்றும் கூறியிருந்தேன். கடந்த மாநாடுகளில் நான் எனது சொற்பொழிவில் அமல்கள் (செயல்களைப்) பற்றி அதிகமாகக் கூறினேன். ஆனால் இப்போது ஈமான் தொடர்பான விஷயங்களைப் பற்றி எடுத்துரைக்க எண்ணியுள்ளேன். எனது பார்வையில் ஈமான் கொள்ள வேண்டிய விஷயங்களில் முக்கியமானதாக இருக்கும் ஒரு விஷயத்தை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். அது மிகவும் கடினமான ஒரு விவகாரமாகும். எதுவரை எனில், மக்களின் செயல்களில் அது அபாயகரமான விளைவை ஏற்ப்படுத்தியுள்ளது. அது என்ன விஷயம்? அதுதான் தக்தீர் என்றும், அதிர்ஷ்டம் என்றும், தலைவிதி என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்ற “கஸா வ கத்ர்” விவகாரமாகும் மேலும் அதற்கு பல பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தக்தீரைப் புரியாததானால் பலர் அழிவுக்காளாயிருகின்றனர். பல சமுதாயங்கள் இதை தெரியாததன் காரணமாக நாசமாகிவிட்டன. பல சமயங்கள் இதனை அறியாத காரணத்தால் நாசமடைந்தன. இன்னும் சொல்லப்போனால் இந்த தக்தீர் விவகாரத்தை புரியாத காரணத்தினாலே மனிதனுடைய ஒழுக்கங்களையும் செயல்களையும் அழித்து நாசமாக்கக் கூடிய போதனைகள் மார்க்கங்களில் நுழைந்துவிட்டன. என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த பிரட்சனையினாலேயே ஐரோப்பிய மக்கள் முஸ்லிம்களைப் பார்த்து பொதுவாக நகைக்கிறார்கள். ஆயினும் அவர்கள் காரணமின்றி நகைக்கவில்லை. மாறாக, அவர்கள் நகைப்பது சரிதான். ஏனென்றால், முஸ்லிம்களே தம்மைப்பார்த்து நகைப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்து விடுகிறார்கள்.

உதாரணமாக, முஸ்லிம்களின் போர்கள் பற்றிய பேச்சு வந்தால், ஐரோப்பிய எழுத்தாளர்கள், ‘அந்த இடத்தில் பயங்கரமான முறையில் குண்டுகள் வெடித்தன, எனினும் முஸ்லிம்கள் பின்வாங்கவில்லை; மாறாக முன்னேறிச் சென்றனர்’ என்று எழுதிவிட்டு, அடுத்து இது அவர்களுடைய வீரத்தையும், தீரத்தையும் காட்டுகின்றன என்று எழுத மாட்டார்கள். மாறாக ‘ஏனெனில் சாகவேண்டும் என்றிருந்தால் செத்து விடுவோம்; சாகக் கூடாதென்றிருந்தால் சாகமாட்டோம் என்ற தமது தலைவிதியின் மீது அவர்களுக்கு நம்பிக்கையிருந்தது?’ என்று எழுதுவார்கள். இந்த (நம்பிக்கையின்) காரணத்தால் எதிரிகளை எதிர்த்து போரிடுவதில் நிலைத்து நின்றாலாவது பரவாயில்லை; ஆனால் ஆனால் குண்டுகள் தொடர்ந்து அதிகநேரம் வெடித்துக் கொண்டிருந்ததால் அவர்கள் அங்கு நிற்கமாட்டார்கள்; ஓடிவிடுவார்கள் என்றும் எழுதுவார்கள்.